பழைய மாணவர் சங்க யாப்பு

உத்தேச திருத்தங்களுடனான யாப்பு 16.10.2016 அன்று பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம்

பெயரும் பணிமனையும் :-

அ) இச்சங்கம் ‘யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்’ என அழைக்கப்படும் (இனி இது இங்கே சங்கம் என்றே குறிக்கப்படும்)
ஆ) இச்சங்கத்தின் பணிமனை கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும்.

நோக்கங்கள் :-

இச்சங்கத்தின் நோக்கங்கள் வருமாறு.
அ)சங்க உறுப்பினர் மத்தியில் ஒற்றுமையையும் கூட்டுறவையும் வளர்த்தல்.
ஆ)கல்லூரிக்கும் உறுப்பினர்களுக்குமிடையில் உணர்வுபூர்வமான நெருங்கிய உறவைப்
பேணி வளர்த்தல்.
இ) (கல்லூரியின்) அன்னையின் சிறப்பியல்புகளையும் நலன்களையும் மேம்படுத்துதல்.

உறுப்புரிமை :-

அ) உறுப்புரிமை 2 வகைப்படும். அதாவது

  • ஆயுட்கால உறுப்புரிமை
  • கௌரவ உறுப்புரிமை

ஆ)கல்லூரியின் சகல பழைய மாணவர்களும் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களாகச் சேர்ந்து கொள்ளத் தகுதியுடையோராவர்.

இ) ஆயுட்கால உறுப்புரிமை:

உறுப்புரிமைக்குத் தகுதியுடைய எந்த நபரும் விண்ணப்பத்துடன் உறுப்புரிமைக் கட்டணம் செலுத்துமிடத்து அவரது விண்ணப்பம் செயற்குழுவினால் அங்கீகரி;க்கப்பட்டால் ஆயுட்கால உறுப்பினராக சேர்க்கப்படுவார். அத்தகைய உறுப்பினர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட திகதியில் இருந்து ஆறு மாதங்களின் பின்னர் சங்கக் கூட்டங்களில் வாக்களிக்கும் உரிமை பெற்றவராவார்.

ஈ) கௌரவ உறுப்புரிமை:-
ஒருவர் கல்லூரிக்கு அல்லது சங்கத்திற்கு பெறுமதியான சேவையாற்றியிருப்பின் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கௌரவ உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவார். கௌரவ உறுப்பினருக்கு வாக்குரிமை இருக்காது.

(உ) உறுப்புரிமைக்கட்டணம் காலத்துக்கு காலம் பொதுச்சபைக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டு இறுதிசெய்யப்படும்.

(ஊ)உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்புரிமை அடையாள அட்டை அதற்குரிய செலவுடன் வழங்கப்படும் . வாக்குரிமை தேவைப்படும் வேளைகளில் உறுப்பினர் அடையாள அட்டை கோரப்படலாம்.

அலுவலர் :-

அ) சங்கத்தின் அலுவலர்கள் வருமாறு. ஒரு தலைவர், ஆறுக்கு மேற்படாத துணைத்தலைவர்கள் , ஒரு செயலாளர், ஒரு துணைச் செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு துணைப் பொருளாளர், ஒரு பத்திராதிபர்

ஆ) தலைவர், ஐந்து துணைத் தலைவர்கள், செயலர்,துணைச் செயலர், பொருளாளர், துணைப் பொருளாளர், பத்திராதிபர் சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவர்.

இ) கல்லூரியின் அதிபர் சங்கத்தின் துணைத்தலைவர்களில் ஒருவராவார்.

ஈ) அலுவலர் தெரிவின்போது தலைவர் செயலாளர் பொருளாளர் பதவிக்கு ஒரு உறுப்பினர் தொடர்ந்து 2 தடவைக்கு மேலாக தெரிவு செய்யப்படமுடியாது

(உ) ஒவ்வொரு பதவிக்காலத்திற்குமான அலுவலர்கள் (கல்லூரி அதிபர் வகிக்கும் உப தலைவர் பதவி தவிர்ந்த ) அனைவருக்குமான தெரிவு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஆண்டுபொதுக்கூட்டத்திற்கு முன்னர் வேட்புமனு கோரப்பட்டு தேர்தல் மூலம் நடைபெறும்.

(ஊ) தலைவர், செயலாளர்,பொருளாளர் பதவி நிலைகளுக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் செயற்குழுவில் கடைசி 5 வருடங்களில் குறைந்தது 1 வருடம் பணியாற்றியவராக இருக்கவேண்டும்

(எ) ஒவ்வொரு செயற்குழு தேர்தலுக்குமான தேர்தல் அதிகாரிகளை பதவியில் உள்ள செயற்குழு நியமிக்கும். தேர்தல் அதிகாரிகள் குழுவில் செயற்குழு உறுப்பினர்களல்லாத 5 உறுப்பினர்கள் இடம்பெறுவர். அவர்களில் ஒருவர் தேர்தல் குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பார்.

அலுவலரின் கடமைகள் :-

அ) தலைவர்

  1. சங்கத்தின் சகல பொதுக்கூட்டங்களுக்கும் செயற்குழுக்கூட்டங்களுக்கும் தலைவர் தலைமை தாங்குவார்
  2. கூட்டம் ஒன்றிற்குத் தலைவர் சமூகம் தராதவிடத்து துணைத்தலைவர்களில் ஒருவரைத் தலைமை தாங்கும் வண்ணம் சபை தெரிவு செய்யும்.

ஆ) செயலர்:-

செயற்குழுவின் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப செயலர் பிரதம நிர்வாக அதிகாரியாவார். அவர் பின்வருவனவற்றின் பாதுகாப்பிற்கும் பராமரிப்பிற்கும் பொறுப்பாவார்.

  1. ஒவ்வொரு உறுப்பினரதும் பெயர், முகவரி, தொழில், இலத்திரனியல் தொடர்பு முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உறுப்பினர் பதிவேடு.
  2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களினதும், செயற்குழுக்கூட்டங்களினதும் அறிக்கைகளை உள்ளடக்கிய குறிப்புப் புத்தகம்.
  3. வருடாந்த அறிக்கைகள்
  4. சங்கத்துடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்கள்

இ) பொருளாளர்:-

சங்கத்திற்குச் சேர்மதியான சகல பணம், நிதி, சொத்துக்கள் ஆகியவற்றை ஏற்று சரியான முழுமையான கணக்கினை வைத்திருப்பதற்கும் செயற்குழுவின் அங்கீகாரத்திற்கு ஏற்ப கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் தகுதி உடையவர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் திகதியில் முடிவடைந்த நிதியாண்டிற்கான ஆய்வறிக்கையிடப்பட்ட கணக்கறிக்கையினை வரவிருக்கும் சனவரி 15ம் திகதிக்கு முன்னர் செயற்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதனை பொதுச்சபை உறுப்பினர்களும் ஏதாவது வகையில் பொதுக்கூட்டத்திற்கு 14 நாட்களுக்கு முன்பதாக பெற்றுக்கொள்ள வழி செய்ய வேண்டும்.

செயற்குழு :-

அ) மேற்குறித்த அலுவலர்களுடன் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படும் வேறு 18 குழு உறுப்பினர்களையும் கொண்டதான செயற்குழுவிடம் (இனி இது ‘குழுவென்றே’ குறிக்கப்படும்) சங்கத்தின் நிர்வாகம் பாராதீனப்படுத்தபப் ட்டிருக்கும்.

ஆ) முறையாகக் கூட்டப்பட்ட குழுவின் கூட்டத்திற்கான நிறைவெண் எட்டாக அமையும்.

இ) குழுவின் எந்த உறுப்பினரும் தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களுக்குப் போதிய முன்னறிவித்தலின்றி வருகை தரத்தவறின் அவர் குழுவின் உறுப்புரிமையை இழந்தவராகக் கருதப்படுவார்.

ஈ)அவசியம் ஏற்படும் போது செயலர் சுயவிருப்பத்தின் பிரகாரம் அல்லது கோரிக்கைப் பிரகாரம் அல்லது குழுவின் பத்துக்குக் குறையாத உறுப்பினர்களின் கையெழுத்து மூலமான கோரிக்கையின் பிரகாரம் குழுவின் கூட்டத்தைக் கூட்டுவார். குழுவின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அவ்வாறான கூட்டம் தொடர்பாக குறைந்தது இரண்டு நாள் முன்னறிவித்தல் கொடுத்தல் வேண்டும்.

உ) அடுத்து வரும் ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் குழுவில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் அதிகாரத்தை குழு கொண்டதாக அமையும்

ஊ) ஒரு செயற்குழு உறுப்பினர் தனது பதவிக்காலத்தில் நடைபெற்ற மொத்த செயற்குழுக் கூட்டத்தில் 50% ஆன கூட்டங்களுக்கு சமூகமளிக்கத் தவறின் அடுத்து வரும் பொதுக்கூட்ட நிர்வாகக் குழுவில் தெரிவு செய்யப்பட உரிமையற்றவராவார்.

எ) குழுவின் பதவிக்காலம் ஒருவருடமாகும். குழுவின் பதவிக்காலம் எக்காரணம் கொண்டும் தானாக நீடிக்கப்பட முடியாது .தேவை நிமித்தம் நீடிக்கப்பட வேண்டுமாயின் பொதுச்சபையின் விசேட பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு அங்கே அதற்கான காரணங்கள் முன்வைக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் அங்கீகாரத்தின் அடிப்படையில் நீடிக்கப்படலாம்

ஏ)அலுலர்களைப்போல செயற்குழுவுக்கான உறுப்பினர்களுக்கான தெரிவும் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் வேட்புமனு கோரப்பட்டு பொதுக்குழுக்கூட்டத்தில் தேர்தல் மூலம் நடைபெறும்.செயற்குழு உறுப்பினர் தேர்வுக்கு முன்னைய செயற்குழுவின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோரிடமிருந்து வேட்புமனு கிடைக்குமிடத்து அவர்கள் போட்டியின்றி தெரிவுசெய்யப்படுவர்.எஞ்சிய இடங்களுக்கு தேர்தல் இடம்பெறும்.

உ)சங்கத்தின் செயற்பாடுகளை இலகுவாக்குவதற்காக உபகுழுக்களை உருவாக்குவதற்கும் , அவ்வாறு உருவாக்கப்படும் உபகுழுக்களையும் பொதுச்சபையால் உருவாக்கப்படும் உப குழுக்களையும் கட்டுப்படுத்துவதற்குமான உரிமையினை செயற்குழு கொண்டிருக்கும்

ஊ) இவ் அமைப்பு விதிகளுள் உள்ளடக்கப்படாத விடயங்களைப் பற்றித் தீர்மானிக்கும் அதிகாரம் குழுவுக்கு உண்டு. அத்தகைய தீர்மானங்கள் அடுத்து வரும் பொதுக்கூட்டத்தில் அங்கீகரிப்பதற்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

பொதுக்கூட்டம் :-

அ) ஆண்டுப் பொதுக்கூட்டம்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதத்து முதலாவது ஞாயிற்றுக்கிழமையில் ஆண்டுப் பொதுக்கூட்டம் சாதாரணமாக நிகழும். செயற்குழக்கூட்டங்களின் உறுப்பினர் வரவு விபரம் உள்ளிட்ட செயலரின் அறிக்கையும் பொருளரின் ஆய்விடப்பட்ட கணக்கறிக்கையும் இப்பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்மான முன்னறிவித்தல் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் செயலருக்குக் கிடைத்தல் வேண்டும். அதற்குப் பின்னர் கிடைக்கப் பெறும் அறிவுறுத்தல்களை ஏற்பது செயற்குழுவின் முடிவாகும்.

ஆ)ஆண்டுப் பொதுக் கூட்ட அறிவித்தல் செயலாளரினால் உறுப்பினர்களுக்கு தபால் மூலமும் பொது அறிவித்தல் மூலமும் தெரியப்படுத்தப்படும். கூடட் அறிவித்தலின் போது பொருளாளர் அறிக்கையும் வெளியிடப்படப்படவேண்டும்.

இ) விசேட பொதுக்கூட்டம்:-

விசேட பொதுக்கூட்டம் ஒன்று செயலரால் ஆட்சிக் குழுவின் விதப்புரையின் பெயரில் அல்லது காரணம் குறித்து முப்பதிற்குக் குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை விடுக்கும் இடத்துக் கூட்டப்படும்.

ஈ) முறைப்படி கூட்டப்படும் பொதுக்கூட்டத்திற்கு நிறைவெண் முப்பதாகும்.

உ)எந்தப் பொதுக்கூட்டத்திற்கும் குறைந்தது 14 நாள் முன்னறிவித்தல் கொடுத்தல்
வேண்டும்.

நிதி :-

அ)சங்கத்தின் நிதி, குழுவினால் தீர்மானிக்கப்படும். வங்கியில் அல்லது வங்கிகளால் சங்கத்தின் பெயரில் வைப்பில் அல்லது கணக்கில் இடப்படும். அத்தகைய வங்கிக் கணக்குகளைப் பின்வருபவர்களில் இருவர் கூட்டாக நடைமுறைப்படுத்துவர்.

பொருளரும், தலைவர் அல்லது செயலரும்.

ஆ)எந்த அலுவலரும் ரூபா 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொகையினை திரவப்பணமாக தமது பொறுப்பில் வைத்திருக்க முடியாது. அவை வங்கியில் வைப்பிலிடப்பட்டிருக்க வேண்டும்.

கணக்குப் பரிசோதனை :-

ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் பிரதான தெரிவாகவும் இரண்டாம் தெரிவாகவும் தெரிவு செய்யப்படும் 2 கணக்குப் பரிசோதகர்களில் ஒருவர் சங்கத்தின் கணக்குகளைப் பரிசோதிப்பார்.

கிளைச் சங்கங்கள்

அ)யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளியில் சங்கத்தின் அனுமதியுடன் கிளைச்சங்கங்கள் தோற்றுவிக்கப்படலாம்  ஒவ்வொரு கிளை அலுவலக ஆட்சிக்குழுவும் சங்கத்தின் பொதுக்கூட்டங்களில் பார்வையாளர்களாக கலந்து கொள்வதற்கு மூன்று பிரதிநிதிகளைப் பார்வையாளர்களாக அனுப்பி வைக்கலாம்.

ஆ)இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கங்களில் அல்லது சங்கத்தின் கிளைகளில் செயற்குழுக்களில் உறுப்பினராகவோ அல்லது அங்கு எந்தவொரு அலுவலர் பதவியினையும் கொண்டிருந்தாலோ எமது சங்கத்தின் செயற்குழுவில் அங்கம் வகிக்க முடியாது.

ஒழுக்காற்று நடவடிக்கை

சங்கத்தினது பொதுச்சபையின் தீர்மானங்களையோ அல்லது செயற்குழுவின் தீர்மானங்களையோ மீறும், சங்கத்திற்கு அல்லது பாடசாலைககு; எதிராக தொழிற்படும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையினை செயற்குழு கொண்டிருக்கும். இந்த ஒழுக்காற்று நடவடிக்கையின் பொருட்டு உறுப்பினரை செயற்குழுவில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கான உரிமையினையும் செயற்குழு கொண்டிருக்கும். மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பொதுச்சபை தீர்மானிக்கும்.

போசகர்கள்

ஒவ்வொரு ஆண்டும் சங்கத்திற்கு போசகர்களாக எண்ணிக்கை 5ற்கு மேற்படாமல் 60 வயதுக்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் பொதுச்சபையால் தெரிவு செய்யப்படுவர். அவர்களுக்கு செயற்குழுவில் வாக்குரிமை இருக்காது

உயர்த்தர இறுதியாண்டு வகுப்பு அணிகள்

சங்கத்தின் செயற்பாடுகளை இலகுவாக்க பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் க.பொ.த உயர்தர இறுதியாண்டு ரீதியாக தங்களுடைய அணிகளின் பிரதிநிதியாக ஒருவரை அணியில் உள்ள குறைந்தது 25 பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் சம்மதத்ததுடன் சங்கத்திற்கு அறிவிக்கும் பட்சத்தில் அவர்கள் அவ்வணிக்கான சங்கத்தின் இணைப்பாளர்களாக கொள்ளப்படுவர். இவர்களுடன் செயற்குழு தொடர்புகளை பேணும்.ஒரு உயர்தர இறுதியாண்டு அணிக்கு ஒரு இணைப்பாளர் மட்டுமே இருக்க முடியும்.

செய்தி ஏடு

சங்கத்தின் நடவடிக்கைகளை சங்க உறுப்பினர்களிடையே பகிருவதற்காக சங்கத்தின் பிரத்தியேக செய்தி ஏடு ஒன்று வெளியிடப்படும்.

தேர்தல் நடைமுறைகள்

தேர்தல் அதிகாரிகள் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை நடப்பு செயற்குழுவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள ஆண்டின் சனவரி மாதத்தின் தொடக்கத்தில் ஆரம்பிப்பர். அதன் போது செயற்குழு எந்தவித தேர்தல் நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டிருக்க முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாடல்கள் யாவும் தேர்தல் அதிகாரிகளினாலேயே மேற்கொள்ளப்படும்.

அமைப்பு விதிகளுக்கு உட்படாத விடயங்கள்

இவ்அமைப்பு விதிகளுள் உள்ளடக்கப்படாத விடயங்களில் அல்லது குறித்த நிபந்தனைகளை எட்டமுடியாத வேளைகளில் பொதுச்சபையின் முடிவுகள் பின்பற்றப்ப டும்

சங்கத்தின் யாப்பு பயன்படுத்தப்படுகின்ற வேளைகளில் அதன் தமிழ் மூலமான பிரதியே மூலப்பிரதியாக கொள்ளப்படும்.

விதிகளுக்கான திருத்தங்கள்

இந்த யாப்பின் எப்பகுதியையும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சிறப்புத் தீர்மானத்தின் மீது அன்றி மாற்றவோ திருத்தவோ முடியாது. அத்தகைய தீர்மானங்கள் கூட்டத்திற்குச் சமூகம் கொடுத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருத்தல் வேண்டும். மாற்றங்கள் கூட்டத்திற்கு 14 நாட்களுக்கு முன்பதாக பொதுச்சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கவும் வேண்டும்

முற்றும்

 

யாப்பினை பதிவிறக்க [ PDF]